மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

20-Sep-2009

கொலாஜ் 21.9.09

வெள்ளி விழா!
தனித்தளம் தொடங்கி வெற்றிகரமான 25-வது வாரம்! தோழர்களுக்கு இனிய ரமலான் வாழ்த்துகள்.
~
சத்யபாமா பல்கலைக்கழகத்தில் வருடாவருடம் கட்டிடக்கலை மாணவர்களுக்கான இந்தியக் கூட்டமைப்பான NASA National Association for Students of Architecture-இன் தென்னிந்திய கலந்தாய்வு, போட்டிகள் இன்னபிற நடைபெற்றது. கேரளம், கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் 17 கல்லூரிகள் பங்குகொண்டன. முக்கியப் போட்டியின் சாரம் 'Blob'-itecture எனப்படும் வடிவில்லா வடிவங்கள் கொண்ட கட்டிடக்கலை. இதற்கான எங்கள் கல்லூரி மாணவர்களின் கட்டிட வடிவமே குஜிலிபான்ஸாக எனக்கு பட்டது... இரண்டு மரங்கள் அருகருகே இருப்பதாக வைத்துக்கொள்வோம்- பனித்துளிகள் படர்ந்த இரண்டு மரங்கள். இங்கே மரங்களை அகற்றினால், வெறும் பனித்துளிகள் படிந்திருந்த வெளி நமக்கு கிடைக்கிறது, கட்டிட வடிவமாக அந்த வடிவற்ற வடிவத்தைக் கற்பித்துக்கொண்டு கவின்கலை காட்சியரங்கம் ஒன்றை வடிவமைத்தோம். இப்போட்டியில் இரண்டாம் பரிசை எங்கள் கல்லூரி மாணவர்கள் பகிர்ந்து கொண்டோம். ஆட்டம்-பாட்டத்தில் நாங்கள் க்ராண்ட் சாம்பியன்கள்! மைக்கேல் ஜாக்ஸனின் வாழ்க்கை வரலாற்றை நடன-நாடகமாக அரங்கேற்றிய போது, திரையைக் கிழித்துக்கொண்டு எம்.ஜே-வின் மூன்வாக் செய்த கணம் அரங்கமே அதிர்ந்தது! ஒட்டுமொத்த தரவரிசையிலும் இரண்டாம் இடத்தை எங்கள் பல்கலைக்கழகமே பிடித்தது. இது தவிர, புகைப்படப் போட்டி ஒன்றும் நடந்தது. 'Power and control' என்ற தலைப்பில் எனது படத்தையும் அனுப்பினேன். மீட்டருக்கு மேல் போட்டுக்கொடுத்தார்கள்.

தாரை, தப்பட்டை, சங்கு சகிதம் கல்லூரி வளாகம் கலகலக்க மூன்று நாட்களும் டப்பாங்குத்து ஆடிவிட்டு வந்தோம். ஜல்ஸா விளையாட்டுகள், டப்ஸா சண்டைகள், நச் ஃபிகர்கள், குஜால் பிரியாணி, டக்கர் கொண்டாட்டங்கள் என்று அல்லோலகல்லோலப்பட்டு வந்த அடுத்த நாள் விடுமுறை வேறு!

~


உன்னைப்போல் ஒருவன் படம் பார்க்க ஆவலாய் இருக்கிறது. இன்னொரு காரணம் சதிலீலாவதி, மே மாதம் போன்ற படங்களில் கு.ந-வாக இருந்து இப்போது ரீ-எண்ட்ரி தந்திருக்கும் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி. அவரது சுவாரசியமான பதிவு ஒன்று இங்கே.

~

எனக்கு மிகப்பிடித்த 'கண்கள் இரண்டால்' பாடலை மிஞ்ச ஒரு பாடல் அதற்குப்பின் வரவில்லை, IMO. ஏற்கனவே ஷெபின் கித்தாரில் செய்த அற்புதத்தை நண்பர்கள் தினப்பதிவில் சொல்லியிருந்தேன். படத்தில் இடம்பெறும் புல்லாங்குழல் மெட்டு ஐஸ்க்ரீமில் வழியும் தேன் ரகம். கூடவே ஹிந்தி வீடியோ ஒன்றினுக்காக டி.ஜே ரீமிக்ஸ் வடிவம் ஒன்றும், கவர் மற்றும் குழல் வடிவங்களும் இதோ. நன்றி ஜேம்ஸ் வசந்தன் சார்!

~


டெட்.காம் உலகப்புகழ்பெற்ற மனிதர்களின் பேச்சுகளை தொகுக்கும் ஒரு வலைத்தளம். சுஜாதா க.பெ-வில் இதைப் பற்றி சொல்லியிருந்தார். கிருபா சார் ட்விட்டரில் இதன் சென்னை அத்தியாயம் பற்றி எழுதியிருந்தார். வி.எஸ்.ராமச்சந்திரனின் பேச்சு டெட்.காமில் சேர்க்கப்பட்டிருக்கிறது. டெட்.காமில் டாப் 10 வீடியோக்களைப் பார்த்திருக்கிறேன், அதிலும் குறிப்பாக ஜானி லீ வழங்கிய சொற்பொழிவில் Wii ரிமோட் என்ற 50$ சமாச்சாரத்தைக்கொண்டு அவர் செய்யும் வித்தைகள் ரொம்ப ரொம்ப விந்தையாக இருந்தது! ஆறு நிமிஷம் மட்டுமே பேசி, வாய்பிளக்க வைத்துவிட்டார்!


~

விநாயகர் சதுர்த்தி முடிந்து அடுத்து ரமலான் விடுப்புகள் வந்துவிட்டன. ஆயுத பூஜை விடுமுறைகள் வேறு வேகமாக வருகின்றன. சீரியல், பெர்ஃபார்மென்ஸ், ரியாலிட்டி, டாக், விமர்சனம், வெட்டிப்பேச்சு எல்லாம் பார்ப்பதை நிறுத்தி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. கே தொ.கா அல்லது செய்திகள் பார்ப்பேன். கவுண்டமணி என்ற நிகரற்ற கலைஞன் தோன்றினால் மட்டும் நகைச்சுவை. கடந்த வி.ச.வி-யில் அப்படி இப்படியென்று 20-25 படங்கள் வளைத்து வளைத்து பார்த்தாச்சு. அடுத்த அசைன்மெண்ட் இப்போது ரெடி. பார்க்க ஆசைப்படும் திரைப்படங்கள்: முகவரி, அலைபாயுதே, சத்யா, ஆஹா என்ன பொருத்தம், ரமணா, இருவர், முதல்வன், ஆண்பாவம், கண்ட நாள் முதல், கில்லி, நெற்றிக்கண். மூன்று படங்களாவது காணக்கிடைத்தால் திருப்தியடைவேன். தீபாவளிக்கு சந்திரமுகியாமே?

~


நர்சிம் அண்ணன் 'ஏதாவது செய்யணும் பாஸ்' பதிவை அவரது என்'ணங்கள் பதிவில் லிங்கியிருந்தார். 180 பேர் அங்கிருந்து மட்டும் அந்த பதிவு வந்து சேர்ந்திருக்கின்றனர். நன்றிண்ணே! அவருக்காகவாவது அந்தப் பதிவின் தொடர்ச்சியை எழுதவேண்டும். இப்போது ஹை-ஸ்பீட் படங்களின் மேல் பித்து பிடித்ததுபோல துளி, நகரும் வாகனங்கள், பறவைகள் எல்லாவற்றையும் எடுத்துத் தள்ளிக்கொண்டிருக்கிறேன். டிப்ஸ் வெல்கம். பதிவுலகத் தொடர்புகள் அதிகரித்துக்கொண்டிருப்பதாலும், பதிவுகள் படிப்பதும் படிப்படியாக ஜாஸ்தியாவதலும் சும்மா ஒரு சேஞ்சுக்கு வலைப்பக்க விமர்சனங்கள் எழுதலாமென்று பார்க்கிறேன். எனி கமெண்ட்ஸ்? ஹாலிவுட் பாலாண்ணே நான் எழுதுவதாகச் சொன்ன பல்ப் ஃபிக்ஷன் பதிவை ரொம்ப எதிர்பார்ப்பதாக சொன்னார். பயமாக இருந்தாலும், சத்தியமா எழுதுறேன் பாஸ்! பல்கலைக்கழகக்காரர்கள் புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்களே!

பி.கு: கேபிள் சங்கர் அண்ணன் தனது படத்தின் போஸ்டரில் மேலே இருக்கும் உறைந்த துளியை உபயோகிக்கப்போவதாக சொல்லியிருக்கிறார். பதிலுக்கு என்ன கேட்கலாம்?
____________________________________________________________________________________________________

04-Sep-2009

செல்ஃபோன் படங்கள் - III சில்ஹவுட்

பிட் குழுவினரின் இம்மாதப் போட்டித்தலைப்பு சில்ஹவுட். எந்தப் படத்தையும் கிம்ப்பில் சில்ஹவுட்டாக எப்படி உருமாற்றம் செய்வதென்று பயிற்சிப்பதிவும் அங்கு காணக்கிடைக்கிறது. கூகுளின் பிக்காசாவைக்கொண்டும், இதே போல் சில்ஹவுட் செய்ய இயலும். பிக்காஸா 3-யை பொறுத்தவரை, அதன் மிகச்சிறந்த அம்சமாக நான் கருதுவது புள்ளிகள் (Noise) அதிகமின்றி ஒளியளவை (Exposure) சரிசெய்ய முடிவதைத்தான். ட்யூனிங் என்ற டேப்பில் (Tab) , இருக்கும் ஃபில் லைட், ஹைலைட்ஸ், ஷேடோஸ் ஆகிய மூன்று மானிகளை விருப்பத்திற்கேற்ப ற்றுகையில், படத்தின் ஒளி மெருகேறுவதோடு இவ்வகை சில்ஹவுட்களையும் செய்ய முடியும். ஏற்கனவே பழைய பதிவுக்கிடங்கில் இருக்கும் படங்களையும் தந்திருக்கிறேன் (கடைசி ஐந்து). உங்கள் விமர்சனத்தின் அடிப்படையில் ஒரு படத்தை அனுப்பலாம் என்றிருக்கிறேன். இதில் முதல் படம் மட்டும் புதுக் கேமராவில் எடுத்தது. மீதியெல்லாம் அலைபேசியில் எடுத்தவைதான், பெரும்பாலும் சோனி எரிக்சன் ஜி-700. Let the best shot win!

சிறகுகள்

Image and video hosting by TinyPic

தென்னங்கீற்று.

Image and video hosting by TinyPic

சூரியக்கதிர்

Image and video hosting by TinyPic

கூரையின் கீழ்

Image and video hosting by TinyPic

அந்திமாலை

Image and video hosting by TinyPic

ஜன்னலோரம்

Image and video hosting by TinyPic

இது ஒரு பொன்மாலைப் பொழுது!

Image and video hosting by TinyPic

நீலவான ஓடை

Image and video hosting by TinyPic

காஞ்சிபுரம் தேரடி வீதி

Image and video hosting by TinyPic

சன்செட் பாய்ண்ட்

Image and video hosting by TinyPic

கருப்பு வெள்ளை

Image and video hosting by TinyPic

ஆகும்பே அஸ்தமனம்

Image and video hosting by TinyPic

பி.கு: இவை டைனிபிக்கில் இணைக்கப்பட்டு, அங்கிருந்து உரல் தந்து பதிவிட்டவை. இதனால், நம் தனிப்பட்ட ப்ளாகர் கணக்கின் சேமிப்பு அளவும் பாதிக்கப்படுவதில்லையாம், வாசகர்களுக்கும் அதிக பளு இன்றி படங்கள் திறக்க வசதியாய் இருக்குமாம்... செவிவழிச்செய்தி.
______________________________________________________________________________________________

01-Sep-2009

ஏதாவது செய்யணும் பாஸ்!

இளநிலை பட்டப்படிப்புகளும், நுழைவுத்தேர்வுகளும் குறித்த பதிவு ஒன்றினை எழுதவேண்டும் என்ற எண்ணம் கடந்த சில வாரங்களாக இருந்தது. சமச்சீர் கல்விமுறையை உயர்நிலைப் பள்ளி அளவில் அமல்படுத்த மத்திய அரசு முன் வந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கும் இந்தத் தருணத்தில், இது குறித்த எனது புரிதலை விவாதம் கருதி முன் வைக்கிறேன். இதெல்லாம் பாதி அப்பாக்களுக்கும், முக்கால்வாசி அம்மாக்களுக்கும் தெரிவதில்லை/புரிவதில்லை என்பது பெரும் சோகம். நர்சிம் அண்ணனின் 'ஏதாவது செய்யணும் பாஸ்' சங்கிலிப் பதிவுகளின் பாணியில் எனக்குத் தோன்றிய யோசனையையும் இடுகையின் முடிவில் சொல்லியிருக்கிறேன்.

பள்ளிகளில் பனிரெண்டாம், பத்தாம் வகுப்புத் தேர்வுகளின் மூலம் மாணவர்களை வடிகட்டுகிறார்கள். முன்னர் எட்டாம் வகுப்பிலும் ஒரு தேர்விருந்தது குறிப்பிடத்தக்கது. அதுவரை கடைநிலை ஊழியர்களுக்கு குறைந்தபட்ச தகுதியாக (Minimum eligibility criteria) எட்டாம் வகுப்புத்தேர்ச்சியே இருந்து வந்தது. தவிர டி.வி மெக்கானிக் போன்ற ஆறு மாதகால பயிற்சி அடிப்படையிலான பணிகளுக்கு அந்தத் தேர்வே அளவுகோலாக இருந்தது. தற்போது, அதுவே பத்தாம் வகுப்பு தேர்வுகளாக ஆகியிருக்கிறது. பாலிடெக்னிக் எனப்படும் டிப்ளோமா படிப்புகளுக்கு பத்தாம் வகுப்பில் கட்டாயத்தேர்ச்சி அவசியமாகிறது. விருப்பத்தின் பேரில், டிப்ளமோ பட்டதாரிகள் லேட்டரல் எண்ட்ரி முறையில் மூன்றாண்டு கால படிப்பிற்குப்பின்னர் இரண்டாமாண்டு பொறியியல் படிப்பில் சேர வழியுண்டு.

பனிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வாய்ப்புகள் சற்றே ஜாஸ்தி. கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் பிரிவுகள் உட்பிரிவுகள் எல்லாம் தவிர ஏனைய துறைகளிலும் வாழைத்தார் மாதிரி குவித்து கூவிக்கூவி அழைக்கிறார்கள். இதில் நம்மூரில் ஸ்டேட் போர்ட், சென்ட்ரல் போர்ட் தவிர மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், மாண்ட்டசோரி என்று எல்லாம் குழப்படிகள் உண்டு. பத்தாவது வரை தான் மெட்ரிக் முதலிய பிற சிலபை (Syllabi), அதற்கு மேலே மெட்ரிக் பள்ளிகளிலேயே ஸ்டேட் போர்ட் முறைமையில் படிக்க வேண்டியது தான். தனியார் பள்ளிகள் வசதிகளிலோ (Facilities), வகுப்பு நேரங்களிலோ (Contact hours), கட்டணங்களிலோ (Fee) அரசின் கட்டுப்பாடுகளை முக்கால்வாசி இடங்களில் கடைபிடிப்பதில்லை. பல இடங்களில் அனுமதியே வாங்காமல் ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்போது, பத்தாம் வகுப்புத்தேர்வை ரத்து செய்வதன் மூலம், தென்னிந்தியாவில் மிகப்பரவலாக செயல்பட்டு வரும் பாலிடெக்னிக் கல்லூரிகள், ஐ.டி.ஐ-க்கள் பாதிக்கப்படுகின்றன. ஏற்கனவே பத்தாம் வகுப்பு வரையே சிரமத்துடன் படித்து முடிக்கும் ஒருவருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் பொருளாதாரச்சுமை. ப்யூர் சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், காமர்ஸ், பிசினஸ் மேத் பகுப்புகளுள் தேர்ந்தெடுப்பதில் மாணவர்களுக்கும், பள்ளிகளுக்கும் குழப்பம் ஏற்படும். மின்கம்பிகளில் பழுது பார்க்கும் லைன்மேன்/ கூட்டல்-பெருக்கல் குமாஸ்தா போன்ற பணிகளில் அமரக்கூட கேல்குலஸும் ஐன்ஸ்டைனையும் படிக்க வேண்டிய சாபக்கேடு. தேர்ச்சி விகிதம் அனாசாயமாக குறைந்து இன்னும் சில பெட்டிச்செய்தி தற்கொலை சிறுவர்கள் உற்பத்தியாவார்கள். பெண்களின் தனிப்பட்ட தேர்ச்சி விகிதத்திலும் வீழ்ச்சி இருக்கலாம்.

அதிமுக்கியமாக இந்த மாற்றத்தினால் நிகழ்வது யாதெனில், பம்மாத்து காட்டிக்கொண்டிருக்கும் தனியார் பள்ளிகளை பெருமளவில் ஒழிக்க முடியும். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அரசுப்பள்ளிகளிலேயே படிக்கலாம், கல்வித்தரம் என்று பொய் சொல்லி வியாபாரம் செய்ய முடியாது . சட்டீஸ்கர், திரிபுரா, ராஜஸ்தான், கேரளம் என்று எங்கிருக்கும் ஏழாம் வகுப்பு மாணவனும் நிகர்நிலைக் கல்விமுறையிலேயே பயிற்றுவிக்கப்படுகிறான், சோதிக்கப்படுகிறான். கட்டணங்களும், மாணவர்களுக்கு கிடைக்கும் சலுகைகளும் சமமாகவே இருக்கும். (பாடங்களின் எண்ணிக்கை, கடினம்/சுலபம், மதிப்பெண் வழங்கும் வழிமுறைகள், பிற செலவுகள், கூடுதல் பயிற்சிகள்) பணிமாற்றம், கல்லூரி நுழைவு ஆகியவற்றின் போதும் சிக்கல் இராது. ஒட்டுமொத்தமாக பார்க்கையில் பள்ளிப்படிப்பிற்கென ஒரே சான்றிதழ் இருக்கும் பட்சத்தில் மொத்தமாக தேர்வினை எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை உயர வாய்ப்பிருக்கிறது.

மேலும், மதிப்பெண்களுக்கு மாற்றாக க்ரேடிங் முறையை அறிமுகப்படுத்த அரசு இசைந்துள்ளது. இது வகுப்புத்தேர்வுகள் முதலிய சிறு அளவிலான பரீட்சைகளில் குதிரைப்பந்தய மனப்பான்மையை போக்க உதவுமே தவிர, விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை இலட்சங்களில் இருக்கையில் ஏகப்பட்ட இம்சைகளுக்கே வழிவகுக்கும். ஒவ்வொரு கல்லூரிக்கும் விண்ணப்பிக்கும் மாணவர்களிடையே மதிப்பெண் அடிப்படையிலான பட்டியலின்படியும் இட ஒதுக்கீட்டின்படியும் சேர்க்கை நடைபெறுகிறது. க்ரேட் பத்து மதிப்பெண் ரேஞ்சில் (Range) வழங்கப்பெறும், ஆனால் தற்போது கடைபிடிக்கப்படும் மிக்கக்குறைந்த மதிப்பெண் வேறுபாடு (Minimum difference in marks between two students) 0.01% வரை இருப்பதால், க்ரேட்டில் இதைக்கொண்டுவர சாத்தியமில்லை. பொதுத்தேர்வைப் பொறுத்தவரை க்ரேடிங் மதிப்பெண் உதவாது என்பதே என் தாழ்மையான கருத்து.

இவற்றைக் குறித்து, நமக்கு அருகாமையில் இருக்கும் பள்ளி நிர்வாகத்திற்கு(வாகங்களுக்கு) ஒரு மடல் எழுதலாம். ஐம்பது பதிவர்கள் எழுதினால் ஐம்பது பள்ளிகளின் பிள்ளைகளுக்கு விஷயம் தெரியும், பரவும். தெரிந்த ஆசிரியர்களிடம் விவாதிக்கலாம். சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி போன்ற பெரு/சிறு நகரங்கள் தவிர்த்து இந்திய அளவிலான கல்லூரிகளின் தரம்/ நுழைவுப்படிவம் குறித்த விவரங்கள் கிராமப்புற மாணவர்களுக்கு தெரிவதில்லை. அந்த விழிப்புணர்வை ஏற்படுத்த நாம் முயலவேண்டும் என்பதே என் விழைவு. அதற்கென கல்லூரிகளே விழிப்புணர்வு முகாம்கள் நடத்துகின்றன. அக்கல்லூரி நிர்வாகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். நாம் பயின்ற பள்ளியைத் தொடர்பு கொள்ள முயன்று நிச்சயம் விவரிக்க இயலும் என்று நம்புகிறேன். ஒரு உறவினரின் அல்லது நண்பரின் பிள்ளையிடம் இது குறித்து தொலைக்காட்சிகளிலும், பிற ஊடகங்களிலும் கிடைக்கும் தகவல்களை சொல்லி, அவர்களைப் பின்தொடரச் சொல்லலாம்.

ஆக, இந்திய மாணவர்கள் அனைவருக்கும் ஒரே குடையின் கீழ் விதிகள் பட்டியலிடப்பட்டு, ஒரே பாடதிட்டத்தில் புத்தகங்கள் விநியோகித்து, ஒன்று முதல் பனிரெண்டு வரை அட்டவணை சகிதம் கல்வி பயிலச்சொல்வது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே. இதனால் நுழைவுத்தேர்வுகள் வரை ஒரு மாணவனின் எதிர்காலத்தை சீர் செய்ய முடியும். இந்தியாவில் பொறியியல்/ மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகள் குறித்து அடுத்த பதிவில் பார்க்கலாம்.

பாதசாரியின் பால்வீதி by வெங்கிராஜா is licensed under a Creative Commons Attribution 2.5 India License.
Creative Commons License
படங்களையும், பதிவுகளையும் (இங்கென்று மட்டும் இல்லை) மூலப்பதிவின் இணைப்பு தந்து வெளியிடக் கோருகிறேன்.

மின்தூது

Enter your email address:

Delivered by FeedBurner

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP