மரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி
கொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.

8 Jun 2009

The Prestige [2006]

பெயர்: தெ ப்ரஸ்டீஜ்
மொழி: ஆங்கிலம்
வகை: மர்மம்/ தொன்மம்.
இயக்குனர்: க்றிஸ்டோஃபர் நோலன்
நடிகர்கள்: க்றிஸ்டியன் பேல், ஹக் ஜேக்மன், மைக்கேல் கெய்ன், ஸ்கார்லெட் ஜோஹேன்சன்.




"ஒவ்வொரு சிறந்த மந்திரஜாலத்திலும் மூன்று பாகங்கள் இருக்கின்றன. முதல் பாகமானது 'ப்ளெட்ஜ்' ஆகும். மந்திரவாதி முதலில் ஏதோ ஒரு சாதாரணமான பொருளைக் காட்டுகிறார்- சீட்டுக்கட்டையோ, பறவையையோ, மனிதனையோ. சமயங்களில், இதை அசலா, நகலா, வடிவமைக்கப்பட்டதா என்று பரிசோதித்தும் பார்க்கச்சொல்கிறார், பெரும்பாலும் அது நிஜமல்ல. பின் அந்த சாதாரண பொருளை காற்றில் கரைக்கிறார்.. காணாமல் போகச் செய்கிறார். இந்த பாகம் 'ட்ரன்' எனப்படும். ஆனால், இப்போது பார்வையாளர்கள் யாரும் கைகளை தட்டுவதில்லை, ஏனென்றால் உண்மையான மாயாஜாலம் பொருளை மறையச்செய்வதில் இல்லை. அதனால் தான் எல்லா தந்திரங்களுக்கும் ஒரு மூன்றாம் பாகம் தேவைப்படுகிறது. காணாமல் போன அந்த பொருளை இப்போது மந்திரவாதி திரும்ப கொண்டு வரவேண்டும். இதுதான் மூன்றில் மிகக் கடினமான பகுதி. அந்த மூன்றாம் பகுதியை நாம் 'ப்ரெஸ்டீஜ்' என்கிறோம்."

இந்த வசனம் வெறும் வார்த்தைகளால் கோக்கப்பட்டிருக்கிறது. பொய்... மாயை. திரையில் இதே வசனம் பொருந்தக்கூடிய மூன்று பின்புலன்களுடைய ஒரே கதை ஓடிக்கொண்டிருக்கிறது. விசேஷமான இந்த திரைக்கதை வடிவத்துடைய நோக்கம் இதுதான்- 'மேஜிக்' கலையைப் போலவே ப்ளெட்ஜ் எனப்படும் முதல் அத்தியாயம், டர்ன் எனப்படும் இரண்டாம் அத்தியாயம், ப்ரஸ்டீஜ் எனப்படும் மூன்றாம் அத்தியாயம். முக்கிய பாத்திரங்களான இரு மந்திரவாதிகள், அவர்களது குடும்பத்தினர், இவர்களின் குரு தந்திரங்களை வடிவமைக்கும் கட்டர் - இவர்களின் அறிமுகமே ப்ளெட்ஜ். ஒரு மரணமும், தொழில்முறைப் போட்டியும் அவர்களை புதிர்களின் குவியல்களினூடே இட்டுச்செல்வது தான் டர்ன். போட்டியில் வென்றது யார், இழந்தது யார், விரிந்த புதிர்களுக்கான விடை என்ன என்பதே ப்ரஸ்டீஜ். இந்த இலேசான கதையை புதிர்களாக மாற்றி, அவற்றை போர்டன் செய்து காட்டும் வளையங்கள் தந்திரத்தைப்போல ஒன்றினுள் ஒன்றாக பிணைத்து நாம் மண்டை காய்வதை ரசிக்கிறார்கள் நோலன் சகோதரர்கள். இதில் காலம் என்பது ஒரு பொருட்டே அல்ல, டைம்லைனின் கோட்பாடுகள் ஏதுமற்ற வெளியில் முன்பின்னாக வளைந்து நெளிந்து ரசிகனின் முழு ஈர்ப்போடும், பங்கேற்போடும் நம்மையும் ஒரு பாத்திரமாக்கி, தியேட்டர்களில் ஜாலங்களை கண்டுகளிக்கும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்களில் ஒருவராக நம்மையும் ஆக்கிவிடுவதே படத்தின் தனிச்சிறப்பு.

லண்டன் நகரின் பிரதான பொழுதுபோக்கே அரங்கங்களில் அரங்கேறும் ஓபரா, இசை நாடகம், சர்க்கஸ், மாயாஜாலம் முதலிய மேடை நிகழ்ச்சிகளே. படத்தில் இடம்பெறும் பல கண்கட்டி வித்தைகள் பதினெட்டாம்/ பத்தொன்பதாம் நூற்றாண்டு மாயாஜால நிபுணர்களின் மாஸ்டர்பீஸ். சைனாக்காரரின் மீன்தொட்டி ட்ரிக், கட்டரின் கூண்டில் மாயமாகும் புறா, போர்டன் செய்யும் தோட்டாவை கையில் பிடித்தல், ஜேக்மன் செய்யும் ட்ரேன்ஸ்போர்டட் மேன் என பலதும் சென்ற நூற்றாண்டுகளின் பிரபல சித்து விளையாட்டுகள். ஐரோப்பிய கலாச்சாரத்தின் பிரதியான இந்த படம் அதன் மூத்த அடையாளங்களான கோதிக்/ ரினைசான்ஸ் கட்டிடக்கலை, தனித்துவமான ஒப்பனை- 'விக்'குகள், தலையில் அணியப்பெறும் ஜோடிக்கப்பட்ட தொப்பிகள், நீள அங்கிகள், மையிருள் அடர்ந்த வீதிகள், மக்கள் பெருமளவில் புழங்கும் விஸ்தாரமான அங்காடி தெருக்கள், கௌரவமாக எண்ணிய வீட்டின் முகப்புகள் என சின்னச்சின்ன விஷயங்களிலும் டீட்டெய்ல்களில் அசத்துகிறார்கள். கட்டரின் புறா, போர்டனின் பந்து, நாணயம் என குறியீடுகளும் படத்தில் உண்டு. மேற்கத்திய பாரம்பரிய பிண்ணனி இசை, அவர்களது பிரத்தியேக ஆங்கிலேய வட்டார வழக்கு- அதற்கென மைக்கேல் கெய்ன் போன்ற பழம் தின்று கொட்டை போட்ட ப்ரிட்டிஷ் நடிகர்களை தெரிவு செய்த நயம் என அங்குலம் அங்குலமாக செதுக்கப்பட்ட காவியம் ப்ரெஸ்டீஜ்.

"ரகசியத்தைக் கண்டுகொள்ளப் பார்க்கிறீர்கள், நீங்கள் கவனமாகப் பார்க்கிறீர்களா? இல்லை. உண்மையில் நீங்கள் பார்ப்பதே கிடையாது: நீங்கள் முட்டாளாக விரும்புகிறீர்கள்."

கத்தியால் அறுத்தால் உடல் செயலிழக்கும் என்று அறிந்தும் இந்திக்கார ஜாதுகர்கள் மூர் மார்க்கெட்டின் அருகில் கூடாரம் அமைத்து வித்தை காட்டுகையில் வாயைப்பிளந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அதையே மூலதனமாக்கி திரைக்கதை எனும் மாயவித்தையால் நம்மை ஆட்கொண்டு நம் கண்களில் மண்ணைத் தூவி ஊரறிந்த ரகசியத்தையே நோலன் உச்ச காட்சியில் போட்டு உடைக்கிறார். படம் முடிந்த பின் "அடச்சே! நான் அப்பவே நெனச்சன் மாப்ள...!" மாதிரி வசனங்கள் காதில் விழுவது சகஜமே. திரைக்கதைக்கு உறுதுணையாக எடிட்டிங்கில் பின்னி எடுத்திருக்கிறார்கள் என சொல்லித் தெரியவேண்டியதில்லை. என்ன தான் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட படமாயினும், கதை நேர்க்கோட்டில் வெறுமையாக இருந்திருக்கும்; நோலனின் ஆகச்சிறந்த திரைக்கதை உத்தியே படத்தின் பெரும் பலமாகும். திரைப்பட விமர்சகர்களே குழம்பிப்போன இந்த படம் மூன்று ஆஸ்கர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு, உலகெங்கும் பதினான்கு விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. படம் பார்த்தவர்கள் மட்டும் படிக்கவும், இதைத்தவிர்த்து இன்னும் பற்பல க்ளூக்களை படம் நெடுகிலும் விட்டுச்செல்கிறார் கதாசிரியர்:

* படத்தின் ஆரம்பத்திலேயே தொப்பிக் குவியல் காட்டப்பெறுகிறது. மீண்டும் தொப்பியை மறைய வைக்க முயல்கையில் அதே இடம் காட்டப்படுகிறது.

* பெயர்களை மாற்றுவது ஆஞ்சியருக்கு புதிதல்ல, காட்லோவ் என்ற ஆசாமியை ஆரம்பம் முதல் காட்டாமலேயே கதையை நகர்த்திச்செல்கையில் சந்தேகம் வலுக்கிறது.

* கைகளில் எந்த முடிச்சு போட்டாய் என்பதற்கு ஒவ்வொரு முறையும் தெரியவில்லை என்பதையே பதிலாக சொல்கிறார் போர்டன் / ஃபெல்லன். ஏனெனில், கட்டியது இருவரில் ஒருவர்; வினவப்படுவது மற்றொருவர்.

* என்னுடைய ஒரு பகுதி தான் அவளை மணந்தது, மற்றொரு பகுதி உன்னை இங்கு காதலித்துக்கொண்டிருந்தது என்று போர்டன் சொல்கிறான். அவனே, ஃபெல்லனின் மனைவியிடம் நீ என்னிடம் இவ்வாறு பேசலாகாது என்கிறான்.

ஒரு முடிச்சை அவிழ்க்கும் நீங்கள் இன்னொரு முடிச்சில் சிக்கிக்கொள்கிறீர்கள். அந்த முடிச்சை அவிழ்க்க நீங்கள் பிறிதொரு முடிச்சை அவிழ்க்க வேண்டியிருக்கிறது. நீங்கள் அவிழ்க்க வேண்டிய அந்த முடிச்சை நீங்கள் ஏற்கனவே அவிழ்த்தாகிவிட்டது.

****1/2
9/10
_________________________________________________________________

20 comments:

வால்பையன் 10 June 2009 at 11:51 am  

//ஒரு முடிச்சை அவிழ்க்கும் நீங்கள் இன்னொரு முடிச்சில் சிக்கிக்கொள்கிறீர்கள். அந்த முடிச்சை அவிழ்க்க நீங்கள் பிறிதொரு முடிச்சை அவிழ்க்க வேண்டியிருக்கிறது. நீங்கள் அவிழ்க்க வேண்டிய அந்த முடிச்சை நீங்கள் ஏற்கனவே அவிழ்த்தாகிவிட்டது.//

முடியல
அழுதுருவேன்

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

படத்தை அக்குவேறா ஆணுவேறா ப்ரிஞ்சி மேஞ்சிடிங்களே தல!

Venkatesh Kumaravel 10 June 2009 at 11:55 am  

நன்றி வால்!
படம் பார்தாச்சா?

நல்ல யோசனை தமிழினி!

தீப்பெட்டி 10 June 2009 at 2:35 pm  

//படம் பார்த்தவர்கள் மட்டும் படிக்கவும்//
அதுக்கு முன்னடியே நான் படிச்சுட்டேனே..
ஒண்ணும் ஆயிடாதுல..

அவ்வ்வ்..

ஒண்ணும் சொல்லுறதுக்கில்ல..

கடைக்குட்டி 10 June 2009 at 4:30 pm  

//படம் பார்த்தவர்கள் மட்டும் படிக்கவும்//


நான் பாக்கலைங்க..


பாத்துட்டு வந்து படிப்போம் ஆமா...

பாலா 10 June 2009 at 6:00 pm  

தேவுடா...,

யார் எழுதினான்னு கூட.. பார்க்காம படிக்க ஆரம்பிச்சி (நீங்க எழுதப்போறேன்னு சொன்னதை, இந்த சமயத்தில் மறந்துட்டேன்), பாதி படிச்சிட்டு இருக்கும்போதே... இனிமே ‘நானெல்லாம் விமர்சனம்-ன்னு எதையாவது கிறுக்கனுமான்னு’ நினைச்சிகிட்டே படிச்சேன்.

பின்னூட்டம் வர்ற வரைக்கும்.. நீங்கன்னே தெரியலை...!!!

நீங்க இருக்கற சைடா பார்த்து ஒரு கும்பிடு போட்டுட்டு.. நடைய கட்ட வேண்டியதுதான்...!!

என்னன்னு சொல்லி... இந்த பதிவை பாராட்டுறது... சொல்லுங்க..????!!!

ஆனா.. நான் சொன்ன மாதிரி.. .தமிழில் வெளிவந்த முதல் ப்ரொ விமர்சனம் இதுதான்.

இனிமே “தமிழ்லயும் எழுதறேன்”னு சொல்லுங்க. நான் விமர்சனம் எழுதறேன்னு சொல்லி ஜோக் பண்ணாம இங்கயே கழண்டுக்கறேன். :) :) :) :)

ஆங்கிலப்படங்களின் “3 பார்ட்” திரைக்கதை யுக்தியே காலம் காலமா... இதுதானே? ஆனா ஒரே வித்தியாசம்.., ஒவ்வொரு பார்ட்டுக்குள் இருக்கும் காட்சிகள் மட்டும், அந்தந்த க்ரூப்பில் கலைஞ்சி இருக்கும்.

கலக்கல்.. அசத்தல்... இன்னும் என்னென்ன.. சொல்லி பாராட்டுறது??!!! :) :) :) :)

U the man...!!!!!!!!!!!!!!

வினோத் கெளதம் 10 June 2009 at 9:28 pm  

வெங்கி பின்னி இருக்க..

நான் ஏற்கனவே பாலா அண்ணா விமர்சனத்தை படித்து விட்டு இந்த படத்தை வாங்கி பார்த்தேன்..

Raman Kutty 11 June 2009 at 12:19 pm  

முடியாது, முடியாது...spring.. summer.. autumn.. spring ... பற்றிய உங்கள் விமர்சனம் அல்லது பார்வை இன்.. English-ல் மட்டும் இருப்பதை ஒப்புக்கொள்ள் முடியாது... தயவு செய்து தமிழில் அல்லது தமிழில் மட்டும் தங்கள் விமர்சனப் பார்வையை
வையுங்கள்..!!!

செய்வீர்கள் என்று நம்புகிறேன்.. ( எனக்கு ஓட்டளிப்பவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்)

ஷண்முகப்ரியன் 11 June 2009 at 1:17 pm  

பாலாவின் பரிந்துரையின் மேல் வந்து இந்த விமரிசனத்தைப் படித்தேன்.
விமர்சனத்தின் தரமும்,தமிழின் அழகும் கவர்ந்தன.படம் பார்க்க வில்லை ஆதலால் நீங்கள் சொல்லி இருக்கும் கருத்தைனப் புரிந்து கொள்ள முடியவில்லை.
தமிழில்தானே எழுதி இருக்கிறீர்கள்.ஏன் ஆங்கிலம் என்று சொல்கிறார்கள்?

பாலா 11 June 2009 at 1:34 pm  

ஷண்முகப்ரியன் சார்,

வெங்கி.. இன்னொரு ப்ளாக் எழுதுறார். அது ஆங்கிலத்தில் மட்டும். அதுதான் எல்லோருக்கும் ஒரு குட்டி வருத்தம்.

எதோ என்னால் முடிஞ்சது. பத்த வச்சிருக்கேன். :)

ஷண்முகப்ரியன் 11 June 2009 at 9:09 pm  

ஹாலிவுட் பாலா said...

ஷண்முகப்ரியன் சார்,

வெங்கி.. இன்னொரு ப்ளாக் எழுதுறார். அது ஆங்கிலத்தில் மட்டும். அதுதான் எல்லோருக்கும் ஒரு குட்டி வருத்தம்.

எதோ என்னால் முடிஞ்சது. பத்த வச்சிருக்கேன். :)//

இவ்வ்ளவு இளம் வயதில் இவ்வளவு திறமையான படைப்பாளியை அறிமுகப் படுத்தியத்ற்கு நன்றி,பாலா.
வெங்கியின் அனைத்துப் பதிவுகளையும் முதல் முறையாகப் படித்தவுடன் இதனை எழுதுகிறேன்.

ராஜாதி ராஜ் 12 June 2009 at 3:15 am  

அதானே??!!

நம்ம பாலா (பதிவுலக பிரபலர் மற்றும் ஆங்கில பட விமர்சன வித்தகர்) சொல்லி தான் கொஞ்சம் எதிர்பார்ப்போட நானும் இங்க வந்தேன்...நிச்சயமா ஏமாறல..அட்டகாசமான விமர்சனம்...படிச்ச பத்து நிமிஷமும் அந்த படத்த மறுபடியும் மனசில ஒட்டி பார்த்துட்டேன்...இப்போ தான் புரியுது...பாலா அண்ணே எதுக்கு உங்கள தமிழ்ல நிறைய எழுத சொல்றாருன்னு :).. ரொம்ப நல்ல விமர்சனம் வெங்கி... The Illusionist பார்த்திருக்கீங்களா? அதும் நான் ரொம்ப ரசிச்ச படம்..
ஆகவே திரு. வெங்கி அவர்களே இது போல நீங்க நிறைய படங்களுக்கு தமிழ் விமர்சனம் எழுதுமாறு உங்களை வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறோம்...

PS: பாலா அண்ணே, நீங்க சொன்ன மாதிரியே எழுதியாச்சு..அடை மொழி நல்லாருக்கா? ;)

தீப்பெட்டி 12 June 2009 at 11:42 am  

வெங்கி சங்கமம் போட்டியில் வென்றதற்கு வாழ்த்துகள்..

வாழ்த்துகள்..
வாழ்த்துகள்..

butterfly Surya 12 June 2009 at 12:00 pm  

மணிப்பால் வெங்கி, வாவ்.. சூப்பர்.

தமிழ் துள்ளி விளையாடுது. அசத்தல்.

படம் பார்த்து மீண்டும் வருகிறேன்.

Venkatesh Kumaravel 13 June 2009 at 12:08 am  

ஹாலிவுட் பாலா, வினோத்கெளதம், வண்ணத்துபூச்சியார், ஷண்முகப்ரியன், ராஜாதி ராஜ்,
raman-pages, தீப்பெட்டி, கடைக்குட்டி அனைவருக்கும் நன்றிகள்...

பாலா அண்ணன் செய்யும் உதவிக்கு கைம்மாறே இல்லை!

தீப்பெட்டி அடுத்த சந்திப்பில்!

Bala- Three act magic/ Three act play: There is a difference right? Screenplay is almost what you claim, but with a little difference of what I mean...
illa?

பாலா 13 June 2009 at 3:39 am  

Three Act Play/Three Act Magic

Play:

இதிலும்.. முதல் ஆக்டில், கேரக்டர்களின் அறிமுகம்/டெவலப்மெண்ட், இரண்டாம் ஆக்டில் அவர்களின் பிரச்சனைகள், மூன்றாம் ஆக்டில், அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு. இப்படிதான் எழுதுவாங்க இல்லையா வெங்கி?

அதைத்தான் நான் குறிப்பிட்டேன். ஆனா.. திரைக்கதையை.. மேஜிக்கின் ஆக்டோடு.. ஒப்பிட்டதுதான்... வெங்கியின் மாஸ்டர் பன்ச்!

உங்க கிட்ட இருந்து நிறைய பேசி கத்துக்கனும். வாய்ப்பு கிடைக்குமான்னுதான் தெரியலை!

Venkatesh Kumaravel 13 June 2009 at 11:44 am  

உங்களை நன் பேர் சொல்லி கூப்பிடுறதே தப்பு..! என்னை ரொம்ப புல்லரிக்க வைக்குறீங்க பாசு! என்னை நண்பர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்ததற்கு நன்றிகள் பல!

அதே தான்.. அப்படி ஒப்பிட்டது தான் நோலனின் மாஸ்டர் பன்ச்!

ராஜாதி ராஜ்: The Illusionist பார்த்திருக்கிறேன். அனாலும் அதைக் காட்டிலும் The Prestige பெட்டர்.. இல்லையா?

அடுத்தது raman-pages கேட்டுக்கொண்டதற்கு இணங்க 'Spring, Summer, Fall, Winter .. and Spring' பற்றிய என் எளிய கருத்துகள்.

ராஜாதி ராஜ் 14 June 2009 at 1:38 am  

நிச்சயமா வெங்கி..மொத்தமாக ஒத்துக்கொள்கிறேன். 'The prestige' is far better than Illusionist.

அடுத்து உங்களின் 'Spring, Summer, Fall, Winter .. and Spring' விமர்சனத்திற்காக ஆவலோடு உள்ளோம்.

Prabhu 15 June 2009 at 8:23 pm  

mobius ring மாடலில் இருக்கும் கதைன்னு கூட சொல்லலாம். முதல் தான் முடிவு.

Venkatesh Kumaravel 15 June 2009 at 9:48 pm  

ராஜாதி ராஜ்.. விரைவில்!

மோபியஸ் ரிங் இது அல்ல என்று நினைக்கிறேன். மெமண்டோ.. அதன் திரைக்கதையை பல குறிப்பெயர்களால் அழைக்கலாம் என்பது வேறு விஷயம். இதில் வரும் தொடக்கமானது ஒரு ப்ரீகர்ஸர் காட்சி. ஃபைட் க்ளப், யூஷுவல் சஸ்பெக்ட்ஸ் முதலிய பிற சஸ்பென்ஸ் த்ரில்லர்களும் இப்படித்தான் தொடங்கும்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் 16 July 2009 at 10:56 am  

idhai naan padikkavillai. padam paarkavEndum enRirukkiREn. paarththuvittup pin padikkiREn :)

-priyamudan
sEral

பாதசாரியின் பால்வீதி by வெங்கிராஜா is licensed under a Creative Commons Attribution 2.5 India License.
Creative Commons License
படங்களையும், பதிவுகளையும் (இங்கென்று மட்டும் இல்லை) மூலப்பதிவின் இணைப்பு தந்து வெளியிடக் கோருகிறேன்.

மின்தூது

Enter your email address:

Delivered by FeedBurner

  © Free Blogger Templates 'Photoblog II' by Ourblogtemplates.com 2008

Back to TOP